Holy childhood Christmas
December 2021-2022

பாலர் சபை வழிகாட்டிகளின் கிறிஸ்துமஸ் விழா

பாலர் சபை (இயேசுவின் கண்மணிகள் இயக்கம்) வழிகாட்டிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் விழாவானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நல்லாயன் நிலையத்தில் இறைவேண்டலுடன் தொடங்கியது. பாலர் சபையின் இயக்குநர் அருள்பணி. மரியசூசை இக்கல்வியாண்டுக்கான அறிவிப்புகள் மற்றும் திட்டமிடுதலை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து அருள்பணி. அன்புராஜ் குழந்தைகளை நம்பிக்கை வாழ்வில் வளர்த்தெடுப்பதற்கான அவசியம் குறித்து ஆழமான கருத்துரை வழங்கினார். பின்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அந்நிகழ்வுக்கு திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்பணி. அந்துவான் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். பள்ளி மாணவச் செல்வங்களின் ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்வின் இறுதியில் ஒவ்வொரு பள்ளிக்கும் பாலர் சபை நாட்காட்டிகளும், கிறிஸ்துமஸ் பரிசுகளும், கேக்கும் வழங்கப்பட்டன. இக்கொண்டாட்டத்தில் நம்முடைய மறைமாவட்டத்தில் செயல்படும் 62 கத்தோலிக்கப் பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பாலர் சபை தொடங்குவோம்!

திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் சில அமைப்புகளுள் பாலர் சபையும் ஒன்று என்பது தனிச் சிறப்பு. ‘குழந்தைகளுக்கு குழந்தைகளே உதவுதல்’ என்னும் நோக்கத்தோடு திருத்தூதுப் பணியில் தங்களுடைய எளிய சிறிய தியாக காணிக்கையின் வழியாக பாலர் சபை உறுப்பினர்கள் செயல்படுவர். பங்குகளிலும், பள்ளிகளிலும் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு கத்தோலிக்க குழந்தையையும் இதில் அங்கத்தினராக இணைத்து அவர்களை இறையன்பிலும், பிறரன்பிலும் வளரச் செய்வதும், அதன் வழியாக இறையழைத்தலை ஊக்குவிப்பதும் சாலச் சிறந்தது. பாலர் சபை தினத்தில் குழந்தைகளிடமிருந்து தியாக காணிக்கை பெற்று அது மறைமாவட்ட பாலர் சபை பணியகம் வழியாக திருத்தந்தைக்கு அனுப்பப்படுகிறது.

பாலர் சபை தினம்

நம் நாட்டில் பிப்ரவரி 2 ஆம் ஞாயிறு பாலர் சபை தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே அந்த நாளை பங்குகளிலும் பள்ளிகளிலும் சிறப்பாகக் கொண்டாடுவோம். இனி வரும் நாட்களில் நம் கத்தோலிக்க பள்ளிகளிலும், பங்குகளிலும் பாலர் சபையைத் தொடங்கி நம் மேலான வழிகாட்டுதலை வளரும் தலைமுறைக்கு வழங்குவோம். பாலர் சபையைத் தொடங்கவும், பணிகளை வகுத்துத் தரவும் மறைமாவட்ட பாலர் சபை பணியகத்தை அணுகவும்.

– இயக்குநர்