ஈசாய் மரம் – டிசம்பர்-16 செக்கரியாவும், எலிசபெத்தும்

லூக்கா 1:13

இன்றைய நாளின் சிந்தனை : செக்கரியாவும், எலிசபெத்தும்

இன்றைய நாளின் குறியீடு: செபிக்கும் கைகள்

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக, இருந்த காலத்தில் அபியா வகுப்பைச் சேர்ந்தவர் செக்கரியா என்ற குரு. இவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்து. இவர் ஆரோன் வழிமரபைச் சார்ந்தவர். இவர்கள் கடவுளின் பார்வையில் நேர்மையாளர்களாய் இருந்தார்கள். கட்டளைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இவர்களுக்கு முதிர்ந்த வயதிலும் குழந்தை இல்லை. எலிசபெத்து கருவுற இயலாதவராக இருந்தார். யூத வழக்கப்படி பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்று நம்பப்பட்டது.

குருத்துவப் பணிமரபின்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவதற்கு சீட்டுக் குலுக்கிப் போடப்படும். இந்த முறை அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. இவர் தூயகத்தில் தூபம் காட்டும் நேரத்தில் மக்கள் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் என்னும் கடவுளின் தூதர் தூப பீடத்தின் வலப்பக்கம் நின்றவாறு அவருக்கு தோன்றினார். செக்கரியா மற்றும் அவருடைய மனைவி எலிசபெத்த் ஆகியோரின் வேண்டுதல் கடவுளால் கேட்கப்பட்டது என்றும், கடவுள் இவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்றும் கூறினார்.

ஆனால் செக்கரியாவோ அதை நம்பி ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டினார். எனவே அவருடைய நா கட்டப்பட்டு, பேச்சற்றவராக இருக்கும்படி செய்யப்பட்டார். சைகைகள் வழியாகவே அனைவரிடமும் உரையாடி வந்தார். பின்பு வானதூதர் சொன்னபடியே எலிபெத்தும் கருவுற்றார். இச்செய்தி வானதூதர் வாயிலாக அவருடைய உறவினர் மரியாவுக்கும் சொல்லப்பட்டது. மரியா வந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கி பணிவிடை செய்தார். எலிசபெத்தும் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு யோவான் என்று பெயரிட்டனர். செக்கரியாவின் நாவும் கட்டவிழ்ந்து பேசத்தொடங்கினார்.

கடவுளால் இயலாதது ஒன்றும் இல்லை என்று துணிவுடன் நம்பிட நம்மை செக்கரியா மற்றும் எலிசபெத்தின் வாழ்க்கை அழைக்கிறது. நாமும் கூட இவர்களைப்போல கடவுளின் முன்பு நேர்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழும்படி இவர்கள் நமக்கு முன்மாதிரி காட்டுகிறார்கள். கடவுளின் பணியைச்செய்து, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றிட தீர்மானம் எடுத்து வாழத்தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! உம்மால் எல்லாம் ஆகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். அவ்வப்போது எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கைக் குறைபாடுகளை நீரே நீக்கியருளும். நாங்களும்கூட செக்கரியாவையும், எலிசபெத்தையும் போல பிரச்சனைகளுக்கும், குறைபாடுகளுக்கும் மத்தியில்கூட உமக்கு மட்டுமே என்றும் பணிசெய்து வாழ வரம் தாரும். ஆமென்.