Alter Servers Meeting

திருச்சி மறைமாவட்ட பீடச் சிறார் மாநாடு – 2022

நம் மறைமாவட்ட திருவழிபாட்டுப் பணிக்குழுவும், பாலர் சபைப் பணியகமும் இணைந்து, திருச்சி மறைமாவட்ட பீடச் சிறார் மாநாட்டை இவ்வாண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வு சூன் மாதம் 4 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லாயன் நிலையத்தில் நடைபெற்றது. திருச்சி மறைமாவட்டத்திலுள்ள 38 பங்குகளிலிருந்து 308 பீடச் சிறார் பங்குப்பெற்று பயனடைந்தனர். அருள்பணி. மைக்கிள் ஜோ அவர்கள் தொடக்கவுரை வழங்கி பீடச் சிறாரை உற்சாகப்படுத்தினார். திருவழிபாட்டுப் பணிக்குழச் செயலர் அருள்பணி. மரியசூசை பீடப்பணியாற்றுவோரின் மேன்மையைக் குறித்தும், பீடச் சிறாரின் வாழ்வும் பணியும் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அருள்பணி ஜே. சகாயராஜ் பீடச்சிறாருக்கு பீடப்பணி குறித்து விளக்கியதோடு, மன மகிழ்வுப் பாடல்களையும், விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்தார். பின்பு இரு பாலரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இறையழைத்தல் ஊக்கவுரை கொடுக்கப்பட்டது. அருள்பணி. அந்தோணி ரமேஷ் திருத்தொண்டர் ஜெயராஜ் ஆகியோர் மறைமாவட்ட அருள்பணியாளருக்கான தங்களது இறையழைத்தல் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். திருச்சி புனித அன்னாள் சபை, மரியின் ஊழியர் சபை, திருச்சிலுவை சபை, பிறரன்பு அருள்சகோதரிகள் சபை ஆகியவற்றிலிருந்து வந்திருந்த அருள்சகோதரிகள் தங்கள் இறையழைத்தல் குறித்தும், தங்கள் துறவற சபையின் பணிகள் குறித்தும் மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர். பீடப்பணி குறித்த செயல் பயிற்சியை மறைமாவட்ட அருள்சகோதரர்கள் பிரகாஷ், பெலிக்ஸ் ஆகியோர் வழிநடத்தினர். அதனைத் தொடர்ந்து பீடச் சிறார் தங்கள் சீருடையுடன் நல்லாயன் நிலையத்திலிருந்து பவனியாகப் புறப்பட்டு புனித மரியன்னைப் பேராலயத்தை வந்தடைந்தனர். அங்கு மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருள்பணி. அந்துவான் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கி பீடச்சிறாரை ஆசீர்வதித்தார். இந்நிகழ்வுகளை செயலருடன் இணைந்து மறைமாவட்ட வேதியர்களும், தன்னார்வ வேதியர் பயிற்சி பெற்றோரும் ஒருங்கிணைத்தனர்.

– அருள்பணி. சு. மரியசூசை, செயலர்