Retreat April 2022

பள்ளி மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான ஆண்டு தியானம்

ஏப்ரல் 2 ஆம் தேதி நம் மறைமாவட்ட எல்லைக்குள் செயல்படும் மறைமாவட்ட, துறுவற சபைப் பள்ளிகளில் பணியாற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான ஆண்டு தியானம் திருச்சி அருங்கொடை இல்லத்திலும், மணப்பாறை புனித லூர்தன்னை ஆலயத்திலும் நடைபெற்றது. திருச்சி மையத்தில் சுமார் 1100 ஆசிரியர்களும், மணப்பாறை மையத்தில் சுமார் 210 ஆசிரியர்களும் பங்கேற்றனர். திருச்சியில் தியானத்தை மேதகு ஆயர் ச. ஆரோக்கியராஜ் அவர்கள் தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். அருள்பணி. மைக்கேல் ராஜ் அருங்கொடை இல்லத்தில் தியானத்தை வழிநடத்தினார். அருள்பணி. சேகர் செபாஸ்டின் மணப்பாறையில் தியானத்தை வழிநடத்தினார். தியானத்தில் ஒப்புரவு அருளடையாளம் வழங்கப்பட்டது. இறுதியில் திருப்பலியுடன் தியானம் நிறைவு பெற்றது. தியானத்திற்கு உதவி செய்திட்ட அருங்கொடை இல்ல இயக்குநர், இணை இயக்குநர் அவர்களுக்கும், மணப்பாறை பங்குத் தந்தை, உதவிப் பங்குத் தந்தை அவர்களுக்கும் எமது நன்றிகள். இந்நிகழ்வுகளை நம் மறைமாவட்ட வேதியர்கள் மூவரும், தன்னார்வ வேதியர் பயிற்சி பெறுபவர்களும் இணைந்து ஒழுங்கமைவு செய்திருந்தனர்.

திருவிவிலியப் பணிக்குழு

கடந்த ஈராண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இவ்வாண்டு விடுமுறை விவிலியப் பள்ளி (ஏடீளு) ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பாசறை ஏப்ரல் 24 ஆம் தேதி நல்லாயன் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. செயலர் அருள்பணி. சு. மரியசூசை தொடக்கவுரை வழங்கினார். பின்பு குழுப் பயிற்சி, பாடற் பயிற்சி, விளையாட்டுகள் என மகிழ்வுடன் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் 34 பங்குகளிலிருந்து 120 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்வுகளை வேதியர் திருமதி. பவுலின், ஓய்வு பெற்ற வேதியர்கள் திரு. ரத்தினகுமார், திரு. செல்வராஜ், தன்னார்வ வேதியர் பயிற்சி பெற்ற திரு. ஜானி, திரு. துரை ஆகியோர் இணைந்து ஒழுங்கமைவு செய்திருந்தனர்.
குறிப்பு: அன்புக்குரிய பங்குத் தந்தையரே, இவ்வாண்டு மே மாதத்தின் இறுதியில்தான் பள்ளி விடுமுறை வருவதால், தங்கள் பங்குகளின் வசதிக்கேற்ற தேதியிலும், நேரத்திலும் விடுமுறை விவிலிய வகுப்புக்களை நடத்தி மாணவர்களிடம் விவிலிய ஆர்வத்தைத் தூண்டிட ஆவண செய்யுங்கள்.

பாலர் சபை (அ) இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

இவ்வாண்டு பங்குகளிலிருந்து பெறப்பட்ட பாலர் சபை காணிக்கை:

புத்தூர் – 2000.00
உறையூர் – 500.00


தாராள உள்ளத்தோடு காணிக்கை வழங்கிய இவ்விரு பங்குகளுக்கும் மறைமாவட்ட பாலர் சபை இயக்குநரின் வாழ்த்தும் நன்றியும்.