ஈசாய் மரம் – டிசம்பர்-18 மரியா

லூக்கா 1:35

இன்றைய நாளின் சிந்தனை : மரியா

இன்றைய நாளின் குறியீடு : லீலி மலர்

மனித குலத்தின் மீட்புக்கான காலம் கனிந்து வந்தபோது கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்ப விரும்பினார். அதற்காக கடவுள், மரியாவை தேர்ந்தெடுத்தார். பிறப்புநிலைப் பாவம் தீண்டாமல் மரியாவை சுவக்கீன் மற்றும் அன்னாவுக்கு முதிர்ந்த வயதில் மகளாகப் பிறக்கச் செய்தார். வெண்ணிற லீலிமலர் போல பாவமாசு ஏதும் அணுகாத கன்னிமரியா தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். கடவுள் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொல்ல தம்முடைய தூதர் கபிரியேலை அனுப்பினார்.

தூய ஆவியால் நிரப்பப்பட்டு மரியா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் என்றும், அவர் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் என்றும் கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவிடம் சொன்னார். ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று கூறி கடவுளின் மகனைக் கருச்சுமக்க கன்னி மரியா இசைவு தெரிவித்தார். பழைய ஏற்பாட்டு ஏவாள் பாம்பை நம்பி பாவத்தை சுமந்தபோது, புதிய ஏற்பாட்டில் வரும் மரியா என்கிற புதிய ஏவாள் வானதூதரை நம்பி புனிதத்தை சுமந்தாள்.

பிறகு மரியா யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தோடு ஏறக்குறைய மூன்று மாதமளவு தங்கியிருந்து பணிவிடை செய்தார். சொந்த ஊரான பெத்லகேமுக்கு தங்கள் பெயரைப் பதிவுசெய்ய யோசேப்பும், மரியாவும் சென்றிருந்தபோது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. விடுதியில் இடம் கிடைக்காமல் மரியா மாட்டுக் கொட்டகையில் தன்னுடைய தலைமகனைப் பெற்றெடுத்தார். மரியா தனது வாழ்வு முழுவதும், தனக்கு நடப்பதை எல்லாம் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார்.

மண்ணில் மனிதராகப் பிறந்த இறைமகன் இயேசுவின் தாயாகிற பாக்கியத்தை, தன்னுடைய கீழ்ப்படிதலால் பெற்றவர் மரியா. உதிரத்தில் இயேசுவைச் சுமக்கும் முன், தன் உள்ளத்தில் இயேசுவைச் சுமந்தார் மரியா என்பதற்கு ஏற்ப, நாமும் இயேசுவை நம்முடைய உள்ளத்தில் சுமக்க முடிவெடுத்தவர்களாக, மரியின் வழியில் மனித மீட்புக்காக உழைக்கத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! மரியாவைப் போன்று நாங்களும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவும், இயேசுவை எங்கள் உள்ளத்தில் என்றும் சுமப்பவர்களாகவும் வாழ உதவிடுவீராக. மரியாவின் வழிகாட்டலில் நாங்களும் மாசில்லாத புனிதமான வாழ்வு வாழ எங்களுக்கும் உமது அருளைப் பொழிந்தருளும். ஆமென்.