மத்தேயு 3:2
இன்றைய நாளின் சிந்தனை: திருமுழுக்கு யோவான்
இன்றைய நாளின் குறியீடு: கிளிஞ்சல் (சிப்பி)
பழைய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாட்டிற்குமான இணைப்புப் பாலம் புனித திருமுழுக்கு யோவான். இயேசுவின் முன்னோடியாக தன்னுடைய பணி வாழ்வைச் செய்தவர். இவருடைய வாழ்க்கைமுறை மிகுந்த கடினமானதொரு துறவு வாழ்வின் அடையாளமாக இருந்தது. சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, பாலைநிலத்தில் வாழ்ந்த இவருடைய உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் ஆகும். இவர் ஒட்டகமுடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்.
மனமாற்றத்தை வலியுறுத்திய இவருடைய போதனைகளும் வாழ்க்கை முறையும் மக்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பையும், இறைவாக்கினருக்குரிய அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது. இவர் யோர்தான் ஆற்றில், மக்களுக்கு பாவமன்னிப்பின் அடையாளமாகத் திருமுழுக்கு கொடுத்து வந்தார். இயேசுவும்கூட தன்னுடைய 30 ஆம் வயதில் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்றார். இவர் தன்னை மெசியா இல்லை என்றும் மெசியாவின் வருகைக்காக தயாரிக்கின்றவர் என்றும் தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார். இயேசுவின் மிதியடிகளை அவிழ்க்கக் கூட தான் தகுதியற்றவன் என்று சொல்லித் தன்னுடைய தாழ்ச்சியை எடுத்துக்காட்டினார்.
திருமுழுக்கு யோவானுடைய குரல், எப்போதும் நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது. ஏரோது அரசன் அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாவை சட்டத்திற்குப் புறம்பே சேர்த்துக்கொண்டதை மிகவும் கோபத்தோடு திருமுழுக்கு யோவான் கண்டித்தார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு தலைவெட்டிக் கொல்லப்பட்டார். வரவிருக்கின்ற மெசியாவின் வருகைக்குத் தயாரிக்க எலியா மீண்டும் வருவார் என்ற யூதர்களின் நம்பிக்கையானது, திருமுழுக்கு யோவானிடம் நிறைவேறியது என்று இயேசுவே குறிப்பிடுவதைப் பார்க்கமுடியும்.
ஆண்டவருக்கான பாதையை ஆயத்தம் செய்யும் பணியை ஆர்வத்தோடு செய்த திருமுழுக்கு யோவானை இயேசு ‘மனிதராய்ப் பிறந்தவருள் பேறுபெற்றவர்’ என்று பாராட்டுகின்றார். அத்தோடு விண்ணரசில் மிகச் சிறியவரும், திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் என்று இயேசு நமக்கும் பேறுபெறும் பாக்கியத்தை வழங்குகிறார். நாமும் திழுமுழுக்கு யோவானைப்போல தாழ்ச்சியுடனும், நீதியுடனும் வாழ்ந்து, ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்திட உறுதி எடுத்து உழைக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! நீதியின் குரலாய் எங்கள் குரல் சமுதாயத்தில் ஓங்கி ஒலிக்கவும், தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் எங்கள் வாழ்வில் என்றும் வெளிப்படவும் நீரே துணை செய்வீராக. திருமுழுக்கு யோவானைப்போல நாங்களும் உம்முடைய பாராட்டுக்குரிய வாழ்க்கை வாழ எங்களுக்கும் உமது அருள் உதவியைப் பொழிவீராக. ஆமென்.