மத்தேயு 1:24
இன்றைய நாளின் சிந்தனை: யோசேப்பு
இன்றைய நாளின் குறியீடு: இரம்பம்
தாவீது குடும்பத்தைச் சார்ந்தவர் யோசேப்பு. இவர் தச்சுத் தொழில் செய்து வந்தார். மரியாவுக்கும், இவருக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோது மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு கேள்வியுற்று, மறைவாக மரியாவை விலக்கிவிட வேண்டும் என்று நினைத்தார். இது அவருடைய மென்மையான குணத்தைக் காட்டுகிறது. நற்செய்தி, யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது நேர்மையாளர் எனச் சொல்கிறது. இவரையே கடவுள் தன்னுடைய திருமகனின் வளர்ப்புத் தந்தையாக இருக்கும்படித் தேர்ந்தெடுத்தார்.
கடவுளின் தூதர் இவருடைய கனவில் சொன்னபடியால், இவர் மரியாவைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார். பேறுகாலம் வந்தபோது கருவுற்ற மரியாவை கைப்பிடித்தவராய் பெத்லகேமில் இடத்திற்காக அலைந்திருப்பார். மரியா இயேசுவைப் பெற்றெடுக்கும் வேளையில் இவரே உடனிருந்து உதவியிருப்பார். யோசேப்பு தனக்கு சொல்லப்பட்டபடியே எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்து, குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணித்து, அவருக்கு இயேசு என்றும் பெயரிட்டார். ஒரு தந்தைக்குரிய கடமைகள் அனைத்தையும் யோசேப்பு மிகவும் கண்ணும் கருத்துமாய் இயேசுவுக்குச் செய்தார்.
ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகின்றான் என்று கனவில் எச்சரிக்கப்பட்டு பிள்ளையையும், தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார். இவ்வாறு மரியாவையும், இயேசுவையும் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற அழிவின் சக்திகளுடன் யோசேப்பு போராடினார். ஏரோதின் இறப்பிற்குப் பின்பு மீண்டும் தனக்கு வானதூதர் சொல்லியபடி நாசரேத்துக்குத் தன்னுடைய குடும்பத்தோடு திரும்பிய யோசேப்பு இறைவனின் விருப்பத்திற்கிணங்க கடைசிவரை வாழ்ந்தார். திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து நன்முறையில் கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் தனது அயாராத உழைப்பால் செய்து முடித்தார்.
கடவுளின் திட்டத்தை வாழ்வின் கடைசிவரை செய்துமுடிப்பதில் முனைப்போடு இருந்த யோசேப்பு நமக்கு இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதில் ஒரு முன்னுதாரணம். நம்முடைய விருப்பத்தை தள்ளிவைத்துவிட்டு கடவுளின் விருப்பத்தைச் செய்ய நாமும் அழைக்கப்படுகின்றோம். யோசேப்பைப் பின்பற்றி நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணிப் பொறுப்புகளை நேர்மையோடும், அர்ப்பண உள்ளத்தோடும் நிறைவேற்ற முயல வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! எங்களுடைய வாழ்வில் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் உம்முடைய திட்டங்களுக்கு நாங்கள் முழுமையாய் ஒத்துழைக்கவும், உம்முடைய விருப்பத்தை துணிந்து நிறைவேற்றுவதன் வழியாக உமது ஆசியை அதிகமாகப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.