ஈசாய் மரம் – டிசம்பர்-20 வானதூதர்

லூக்கா 2:10
இன்றைய நாளின் சிந்தனை: வானதூதர்

இன்றைய நாளின் குறியீடு: இறக்கைகள்

விவிலியத்தில் வானதூதர்களின் பணிகளைப் பற்றி நிறைய வாசிக்கின்றோம். வானதூதர்கள் கடவுளை நேருக்கு நேராகக் கண்டு இடையறாது அவரை மாட்சிப்படுத்தும் மகத்தான பணியைச் செய்கிறவர்கள் ஆவர். மீட்பின் வரலாற்றில் கடவுளின் செய்தியை சுமந்து வந்து மனிதர்களுக்கு கொடுக்கும் பொறுப்பு இவர்களுக்கு தரப்பட்டது. விவிலியத்தில் சேராபீன்கள், கெருபுகள் என்று பலவகையான வானதூதர்களின் கூட்டத்தினைப் பார்த்தாலும் நற்செய்தி நூல்களில் வருகின்ற சில வானதூதர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் முக்கியமானவை.

செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பை முன்னறிவித்தவர் கபிரியேல் என்கிற வானதூதர். அதேபோல மரியாவுக்கு இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவரும் கபிரியேல் என்னும் வானதூதரே ஆவார். யோசேப்புக்கு கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளப் பணித்தவரும் ஆண்டவருடைய தூதர் ஒருவரே. மேலும் யோசேப்பின் கனவுகளில் அடிக்கடி ஆண்டவருடைய தூதர் தோன்றி அவர் என்ன செய்யவேண்டுமென்பதை அவருக்குத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

இயேசுவின் பிறப்பின் போது இடையர்களுக்கு தோன்றி பெரும் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தியாக மெசியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தவரும் வானதூதரே. பிறகு விண்ணகத் தூதர் பேரணி தோன்றி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி என்றும், உலகில் அவருக்கு உகந்தோருக்கு மனிதருக்கு அமைதி என்றும் ஆர்ப்பரித்து கீதம் இசைத்தது. இவ்வாறு மண்ணுலகிற்கு இறைவனின் திட்டத்தைக் கொண்டு வருவதும், இறைவன் தரும் மகிழ்வை மனிதருக்கு முழங்குவதும் வானதூதர்களின் பணியாக இருந்ததென இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகளில் பார்க்கிறோம்.

வானதூதர்கள் நமக்கும் கடவுளின் செய்தியை நற்செய்தியாக சுமந்து வரவேண்டும் என்று நாம் விருப்பப்பட வேண்டும். நம்மைத் தேடி எத்தனையோ செய்திகள் வந்தாலும் வானதூதர் கொண்டுவரும் செய்தியைப் போல எதுவும் நிறைவானதாக, மகிழ்வானதாக இருக்கப் போவதில்லை என்று புரிந்து கொள்வோம். கடவுளின் தூதர்கள் நமக்குச் சொல்லுகிறபடி நாமும் செயல்பட்டு, கடவுளின் மகிழ்வைப் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தவர்களாய் வாழத் தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! எங்கள் வாழ்வில் உம்முடைய வானதூதர்களின் வழியாக, நீர் எங்களுக்கென வைத்திருக்கும் மேலான திட்டத்தை நாங்கள் அறிந்துகொள்ளவும், அதன்படி செயல்படவும் நீர் எங்களுக்கு உதவிடுவீராக. அதன் வழியாக உம்முடைய நிறைமகிழ்ச்சியை எங்களுக்கும் வானதூதர்கள் மூலம்; அறிவித்து, எங்கள் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தருளும். ஆமென்.