லூக்கா 2:11
இன்றைய நாளின் சிந்தனை: இடையர்கள்
இன்றைய நாளின் குறியீடு: கோலும், மிதியடியும்
இஸ்ரயேல் மக்களின் முதன்மையான தொழில் ஆடு மேய்த்தல் ஆகும். செல்வம் படைத்த யூதர்கள் தங்கள் ஆடுகளை கூலிக்கு ஆள் அமர்த்தி மேய்க்கச் செய்வார்கள். பாமரர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தங்கள் கிடையை தாங்களே மேய்த்தும், காவல் காத்தும் வருவார்கள். விவிலியப் பின்னணியில் ஆடு மேய்க்கும் தொழில் என்பது முக்கியமான ஒன்று. இறையியல் அடிப்படையில் அது கடவுளை ஆயனாகவும், மக்களை மந்தையின் ஆடுகளாவும் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாக இருக்கின்றது.
ஆடு மேய்ப்பவர்கள் தங்கள் வசிப்பிடத்தையும், உறவையும் பிரிந்து பல நாட்கள் ஊருக்கு வெளியே வயல்வெளிகளிலே தங்க வேண்டியிருக்கும். இடையர்கள் ஆடு மேய்க்கும்போது பல ஆபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தங்கள் ஆடுகளை ஓநாய் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் இறைவனின் பார்வையில் சிறப்பிடம் பெறுகின்றார்கள்.
இயேசுவின் பிறப்பின் போது ஊருக்கு வெளியே தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்கள்தான் முதன் முதலில் மெசியாவின் பிறப்புச் செய்தியைக் கேட்டார்கள். வானதூதர் இடையர்களிடம் மகிழ்ச்சியின் செய்தி என்று சொல்லி இயேசுவின் பிறப்புச் செய்தியை அறிவித்தார்கள். இடையர்களாக இருந்தவர்களுக்கு தங்களை மீட்க வரும் மீட்பரின் பிறப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்க வேண்டும். அன்று சமூகத்தின் பார்வையில் முகவரி இல்லாத முகங்களாகிய இடையர்களுக்கு, இன்பமான இயேசுவின் பிறப்புச் செய்தியை முதலில் அறிவித்ததோடு, திருமகன் இயேசுவின் திருமுகத்தை முதலில் பார்க்கும் பாக்கியத்தையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.
நள்ளிரவு வேளையிலும் விழிப்புடன் இருந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்ததால் இயேசு பிறப்பின் நற்செய்தி இடையர்களுக்குக் கிடைத்தது. இந்த அடையாளம் இல்லாத ஆட்டு இடையர்களைப்போல நாமும்கூட கடவுளின் கடைக்கண் பார்வையில் தயை நிரம்பப்பெற்றவர்களாய் விழிப்புடன் நம்முடைய பணியைச் செய்ய உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! நாங்களும் இடையர்களைப் போல எங்களில் பணிப்பொறுப்புகளில் விழிப்புடன் இருக்க உதவிடும். ஊருக்கு வெளியே, ஆபத்தான சூழலில் இருந்த ஆட்டிடையர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு ஆனந்த்ததைக் கொடுத்தது போன்று எங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் மகிழ்ச்சியால் நிரப்புவீராக. ஆமென்.