ஈசாய் மரம் – டிசம்பர்-24 இயேசு

யோவான் 1: 14

இன்றைய நாளின் சிந்தனை: இயேசு

இன்றைய நாளின் அடையாளம் : சிலுவை

கடவுள் நம்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடாக தன்னுடைய ஒரே பேறான மகனை மனிதராகப் பிறக்கச் செய்தார். மரத்தால் விளைந்த சாபத்தை மரத்தால் வெற்றிகொள்ள இயேசு மரத்திலே மரிக்க வேண்டியிருந்தது. அதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டியிருந்தது. மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு தொடக்கநூலில் ஏதேன் தோட்டத்தில் உடைபட்டது. உடைந்த இந்த இறைமனித உறவை மீண்டும் சீர்செய்ய மனிதனைக்காட்டிலும் கடவுளே முன்வருகிறார். அதுவே இயேசுவின் மானுட ஏற்பு.

தன்னை உதறிய மனித இனத்தை, தனக்கு எதிராக தவறுகளை தாராளாமாய் செய்கிற மானுட குலத்தை, தான் அனுப்பிய இறைவாக்கினர்களை தாக்கிய மனித சமூகத்தை கடவுள் வெறுக்கவில்லை. கடவுள் எப்போதும் தன்னுடைய பிள்ளைகள் மீது அன்பும் கருணையும் கொண்டவராய் இருக்கிறார். சேற்றில் தன் பிள்ளை விழும் போது ஓடிச்சென்று, தாயே சேற்றில் இறங்கி தூக்கி எடுப்பாள் அல்லவா? அதைவிட அதிகமாகவே கடவுள் செய்கின்றார்.

இயேசு கடவுளின் அன்பின் அடையாளம். கடவுள் மனிதரை எந்த அளவுக்கு அன்பு செய்தார் என்பதை இயேசுவின் வாழ்வு நமக்கு விளக்கிச் சொல்கிறது. கடவுள் அன்பாய் இருக்கின்றார் என்றும் அதை உறுதிப்படுத்துவதற்கு இயேசு மனிதராகப் பிறந்தார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவேதான் யோவான் தன்னுடைய திருமடலில் எழுதினார்: ‘நாம் வாழ்வுபெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரேமகனைஉலகிற்குஅனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.’ (1யோவா 4:9). இயேசுவின் பிறப்பு முதல் இறப்புவரை, அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இறைவனின் அன்பின் திருவெளிப்பாடாகவே அமைந்திருந்தது.

நாம் விலகிப் போனாலும் விரும்பிநம் அருகே வந்துநிற்கக் கூடியது, தொலைந்து போனாலும் தேடி வரக்கூடியது, நாம் காயப்படுத்தினாலும் நமக்கு கருணைகாட்டக் கூடியது, இதுவே தெய்வீக அன்பு. அது இயேசுவின் அன்பு. அது இறைவனின் அன்பு. அன்பாய் நாமும் இயேசுவைப் போன்று பிறக்கவும், அன்பினால் நம் வாழ்வு தினமும் இயக்கப்படவும் உளமார உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! எம்மை எவ்வளவு அதிகமாக நீர் அன்பு செய்கின்றீர் என்பதை நாங்கள் உம்முடைய திருமகனின் திருப்பிறப்பின் வழியாக அறிந்து கொண்டுள்ளோம். என்றும் நாங்கள் நீர் எம்மீது காட்டும் அன்பிற்கு பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழவும், அன்பால் இயக்கப்படும் வாழ்வை நாங்கள் வாழவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்