தன்னார்வ வேதியர் அடிப்படைப் பயிற்சி – சான்றிதழ் வழங்கும் விழா

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நல்லாயன் நிலையத்தில் தன்னார்வ வேதியர் அடிப்படை பயிற்சி பெற்ற 38 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நம் மறைமாவட்ட ஆயர் மேதகு. ச. ஆரோக்கியராஜ் தலைமையேற்க, மறைமாவட்ட முதன்மைச் செயலர் அருள்பணி. அமல்ராஜ், மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி. அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பயிற்சி அறிக்கையும், செயலர் தந்தையின் உரையும், பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் தந்தையின் வாழ்த்துரையும், ஆயரின் ஆசியுரையும் இடம் பெற்றன. பயிற்சி பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்த தங்களது அனுபவப் பகிர்வுகளை மேற்கொண்டனர்.

பயிற்சி விபரம்: 2021 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தொடங்கிய இப்பயிற்சி வகுப்புகள் எல்லா சனிக்கிழமைகளிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நல்லாயன் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வாறு மொத்தம் 18 வகுப்புகள் நடைபெற்றன. இவ்வகுப்புகளில் திருவிவிலியம், மறைக்கல்வி, திருவழிபாடு ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி வழங்கியவர்கள்: மேதகு. ச. ஆரோக்கியராஜ், அருள்பணி. டயனீசியஸ், அருள்பணி. சவரிமுத்து, அருள்பணி. விக்டர் ஜெயபாலன், அருள்பணி. அன்புராஜ், அருள்பணி. அருண் பிரசாத், அருள்பணி. அருள்ராஜா, அருள்பணி. மரியசூசை ஆகியோர் இவ்வகுப்புகளில் கருத்துரை வழங்கினார்கள். இவர்களுக்கு எனது தாழ்மையான நன்றிகளும் பாராட்டுக்களும்.

பயிற்சியில் பங்கேற்றவர்களின் பங்கு விபரம்: மேலப்புதூர், பழையகோவில், பசிலிக்கா, துரைசாமிபுரம், தெரசாள்புரம், சுப்ரமணியபுரம், ஏர்போர்ட், மணப்பாறை, அம்சம், தெப்பக்குளம், பொன்மலை, கொட்டப்பட்டு, கல்லுக்குழி, மாத்தூர், முல்லைக்குடி ஆகிய பங்குகளிலிருந்து மொத்தம் 38 பேர் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர். இவர்கள் தங்கள் பங்குத்தந்தையர் வழியாகவும், பிறர் வழியாகவும் பயிற்சி குறித்து அறிந்துகொண்டு மிகுந்த ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் இப்பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களை அனுப்பி வைத்த இவர்களுடைய பங்குத்தந்தையருக்கு எனது எளிய நன்றிகளும் பாராட்டுக்களும்.

பங்குத் தந்தையர்கள் விரும்பினால் இவர்களைத் தங்கள் பங்குகளில் மறைக்கல்வி கற்பித்தல், திருவழிபாடு தயாரித்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்களில் தகுதியும் திறமையும் வாயந்தவர்கள் தேவையின் அடிப்படையில் மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுவின் தன்னார்வ வேதியர்களாகவும் பயன்படுத்தப்படுவர். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர் பயிற்சியும் வழங்கப்படும்.